மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரான திரு. ஆர்.வி. குமரேசன், வடலூரை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சன்மார்க்க சங்கத்தின் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த கிராமமான திருநாங்கூர் அடுத்த குச்சிப்பாளையம் மக்கள் நேரில் வந்து அவரை சந்தித்து, அவருக்கு மாலை அணிவித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த காலத்தில் கிராம முன்னேற்றத்திற்காக அவர் மேற்கொண்ட புரட்சிகர முன்னெடுப்புகளை நினைவுகூர்ந்த மக்களிடம் நன்றி தெரிவித்த திரு. குமரேசன், சன்மார்க்க சங்கத்தின் அடுத்தகட்ட திட்டங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு திருவருட்பிரகாச வள்ளலார் பெருமானால் தோற்றுவிக்கப்பட்டது சமரச சுத்த சன்மார்க்க சங்கம். அனையா அடுப்புடன் இயங்கி வரும் இந்த சங்கம், சர்வதேச அளவில் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது.
சன்மார்க்கிகளுக்கான சட்டப் பாதுகாப்பை உறுதி செய்யவே மாநில வழக்கறிஞர் பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக திரு. ஆர்.வி. குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசிய அவர், தமிழ்நாடு முழுவதும் உள்ள சன்மார்க்கிகளுக்கு சட்டப் பாதுகாப்பு அரணை உருவாக்குவதே முதல் பணி என்றார்.
மேலும், சன்மார்க்கிகளுக்கு ஜாதி, மதம் இல்லை என்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை அரசிடம் இருந்து பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலாரின் சன்மார்க்கம் என்பது அனைத்து மதங்களையும் தாண்டிய முக்தி நிலைக்கானது அல்ல, அது உடலை ஒளியாக மாற்றும் சித்தி நிலைக்கான மார்க்கம். இது 100 சதவீதம் அறிவியல்பூர்வமான ஆன்மீகம் என்றும், இது ஒரு வேதியியல் மாற்றம் (Chemistry) போன்றது என்றும் சன்மார்க்கிகள் கூறுகின்றனர்.
இந்த சன்மார்க்கக் கொள்கைகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் ஒரு பெரும் ஆன்மீகப் புரட்சி, தற்போது சட்டப் போராட்டங்கள் வாயிலாகப் புதிய உத்வேகம் பெற்றுள்ளது சிறப்பானது.